பஞ்சாங்கமும் பஞ்ச அங்கங்களும் பகுதி-6

அன்றாடச் செயல்களில் நட்சத்திரங்களின் பங்கு:-

ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, சுப மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு உரிய நாளினைத் தெரிவு செய்யும்போது அன்றைய நட்சத்திரமும் கருத்தில் கொள்ளப்படுகிறது. இதற்கு ஏற்ப மொத்தமுள்ள இருபத்தியேழு நட்சத்திரங்களில் எவையெவை எந்தெந்தச் செயல்களுக்கு உகந்தவை எனப் பஞ்சாங்கக் கணிப்பாளர்கள் வரையறை செய்திருக்கிறார்கள்.

இதற்கு ஏதுவாக இந் நட்சத்திரங்கள் யாவும் ஏழு (7) பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இப் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் இடம்பெறும் நட்சத்திரங்கள் யாவும் அப் பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் செயல்களுக்கு ஏற்றவை எனக் கொள்ளப்படுகின்றன.

  1. அஸ்வினி, பூசம், அத்தம் –இம்மூன்று நட்சத்திரங்களும் சுலபமானவை அல்லது துரிதமானவை [ Light/Swift] எனவும்……
  2. பரணி, மகம், பூரம், பூராடம், பூரட்டாதி ஆகியவை கொடூரமானவை [Cruel] எனவும்….
  3. கார்த்திகையும் விசாகமும் ‘கலப்பு வகை’ [Mixed]யைச் சார்ந்தவை எனவும்………
  4. ரோகிணி,உத்தரம், உத்தராடம், உத்திரட்டாதி ஆகியவை ‘நிலையானவை’ [Fixed]  என்றும்….
  5. மிருகசீரிடம், சித்திரை, அனுஷம், ரேவதி என்பன ‘மிதமானவை’ [ Gentle ] எனவும்….
  6. திருவாதிரை, ஆயில்யம், கேட்டை, மூலம் இந் நட்சத்திரங்கள்  ’மோசமானவை’‘ [Dreadfull] எனவும்…..
  7. புனர்பூசம்,சுவாதி, திருவோணம், அவிட்டம், சதயம் என்பவை ‘தற்காலிகமான  அல்லது இயங்கும்’ தன்மை கொண்டவை எனவும்   …

இவை ஏழு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன.

இனி இப் பிரிவுகளில் இடம் பெற்றுள்ள நட்சத்திரங்களில் செய்வதற்கு ஏற்றவை என வகுக்கப் பட்டுள்ளனவற்றைப் பார்ப்போம்.

இலகுவானவை அல்லது துரிதமானவை எனப்படும் அஸ்வினி, பூசம், அத்தம் இம்மூன்று நட்சத்திரங்களும்;  நுண்கலைகள், அலங்காரம்,ஆன்மீகம் தொடர்பான செயல்கள், மருத்துவ சிகிச்சை,விளையாட்டு மற்றும் களியாட்ட நிகழ்வுகள்,கல்வி ஆரம்பம், பிரயாணம், புதிய தொழிற்சாலைகளை நிறுவுதல், நண்பர்களைச் சந்தித்தல்,ஆடம்பர அனுபவம், தொழில் நுட்பச் சேவையில் ஈடுபடுதல், பயிற்சியில் ஈடுபடுதல் மற்றும் கடன் பெறுதல் போன்றவற்றுக்கு  ஏற்றவை எனச் சொல்லப்பட்டுள்ளது.

குரூரமானவை என வகைப் படுத்தப்பட்டிருக்கும் பரணி, மகம், பூரம், பூராடம், பூரட்டாதி இவ்வைந்தும்;  எதிரிகளை அழித்தல், முரண்படுதல், தீய செயல்கள் ( மாந்திரீகம், தந்திரம் போன்றவை), நஞ்சூட்டல், தீவைத்தல், போரிடுதல், ஏமாற்று,ஏற்கனவே இருப்பனவற்றை அழித்தல் போன்ற கடுமையும் கொடூரமும் கலந்த செயல்களுக்கு உரியவை ஆகும்.

’கலப்பு’ வகையில் அடக்கப்பட்டிருக்கும் கார்த்திகையும் விசாகமும் ;வழக்கமான செயல்களில் ஈடுபடுவதற்கும், தொழில் தொடர்பான கடமைகளை ஆற்றுவதற்கும், நாளாந்தம் செய்யும் செயல்களை ஆரம்பிப்பதற்கும் உரியவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.

நிலையானவை எனப்படும் ரோகிணி, உத்தரம்,உத்தராடம்,உத்திரட்டாதி இந் நான்கு நட்சத்திரங்களும்; முடிசூட்டல் அல்லது பதவி ஏற்பு, நகரம் அல்லது குடியிருப்புகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுதல்,குளம்,கிணறு என்பன தோண்டுதல், மரம் நடுதல்,தானியம் விதைத்தல், ஆலய கும்பாபிஷேகம், தான தருமங்களில் ஈடுபடல்,கோவில் அமைத்தல், நிலம் வாங்குதல் போன்ற, நீண்டகாலம் நிலைத்திருக்கும் செயல்களில் ஈடுபட ஏற்றவை ஆகும்.

மிதமானவை எனும் பிரிவில் இடம் பெறும் மிருகசீரிடம், சித்திரை, அனுஷம்,ரேவதி ஆகிய நான்கும்; நுண்கலைகள், கற்றல், புதிய நண்பர்களை அடைதல், புதிய ஆடை ஆபரணம் வாங்குதல், காதல் வயப்படுதல், திருமணம், ஆடல் பாடல், பிரயாணம் தொடங்குதல், திருவிழாக்கள், பயிர்த்தொழில், சுப நிகழ்ச்சிகள், அலங்கரித்தல், முதலிரவு போன்றவற்றுக்கு உகந்தவை என வகைப்படுத்தப் பட்டுள்ளன.

மோசமான நட்சத்திரங்கள் என்னும் பிரிவில் இடம்பெறும் திருவாதிரை , ஆயில்யம்,கேட்டை, மூலம் இந் நான்கும்;  பிரிதல், போரில் வெற்றியீட்டல்,அழித்தல் தொடர்பான செயல்கள்,சிறையிடல், உடன்பாடுகளை முறித்துக்கொள்ளுதல், ஆவியுலகு தொடர்பான செயல்கள் போன்றவற்றுக்கு ஏற்றவை எனச் சொல்லப்பட்டிருக்கின்றன.

அசையும்(இயங்கும்) தன்மையுடையவை எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்  புனர்பூசம்,சுவாதி,திருவோணம்,அவிட்டம்,சதயம் ஆகிய ஐந்தும்; தற்காலிக பயன்களை அளிக்கவல்ல எல்லாச்செயல்களுக்கும், புதிய வண்டி வாகனங்களைப் பெறுதல், தோட்டவேலை, பூங்கா அமைத்தல், நண்பர்களுடன் தொடர்பினை ஏற்படுத்துதல், பிரயாணம்,மனமகிழ்ச்சி தரும் சமூகத் தொடர்புகள் யாவற்றுக்கும் ஏற்றவை எனச் சொல்லப்பட்டுள்ளது.

இங்கு மேலே குறிப்பிடப்பட்டவை அனைத்தும் பொதுவானவையே ஆகும். சம்பந்தப்பட்ட ஒருவரது நட்சத்திரம், மற்றும் ஜோதிட ரீதியிலான பலன்களை ஒட்டியும் அவரது செயற்பாடுகள் தீர்மானிக்கப்படின் விளைவுகள் சிறப்பனவையாக அமையும்.மேலும், இதில் சொல்லப்பட்டிருக்கும் குரூர,மோசமான நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் அவ்வாறே இருப்பர் என எண்ணிவிடவேண்டாம்.

ஜோதிடத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் பிறந்தவர்களுக்குக் கூறப்பட்டிருக்கும் குண இயல்புகள், அவர்களது செயல்கள் என்பன முற்றிலும் வேறானவை ஆகும். இதில் கூறப்பட்டிருப்பவை ‘புரோகிதர்’கள் பயன்படுத்தும் ‘நாள் காரியங்கள்’ தொடர்பானவை மட்டுமே!

”அபிஜித்” நட்சத்திரத்தின் பங்கு:

ஆரம்பத்தில் ராசிமண்டலத்தில் உள்ள நட்சத்திரத் தொகுதிகள் 28 ஆகப் பிரிக்கப்பட்டிருந்தன எனவும், காலப்போக்கில் அதில் இடம்பெற்றிருந்த ‘அபிஜித்’ என்னும் நட்சத்திரம் அவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டு மொத்தம் 27 நட்சத்திரங்களாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ‘அபிஜித்’ உத்தராடத்தின் இறுதி 15 நாழிகைகளையும், அதனை அடுத்துள்ள திருவோணத்தின் முதல் 4 நாழிகைகளையும் உள்ளடக்கிய மொத்தம் 19 நாழிகைகளுக்குரியதாகும்.[ ஒரு நாழிகை 24 நிமிடங்களுக்குச் சமம்].

இப்போதுள்ள நட்சத்திரப் பிரிவுகளில் அபிஜித் இடம்பெறாவிடினும், இதற்குரியதாகச் சொல்லப்படும் ,மேற்குறிப்பிட்ட 19 நாழிகை நேரம் நல்ல காரியங்களைத் தொடங்குவதற்கு மிகச் சிறந்த காலப்பகுதியாக நம்பப் படுகிறது. இந் நேரத்தில் ஆரம்பிக்கும் நற்றொழில்கள் யாவும் பல்கிப் பெருகி, சமூகத்துக்கும் அதனை ஆரம்பித்தவருக்கும் வளங்களை நல்கும் எனச் சொல்லப்படுகிறது.

இதே போன்று ‘பஞ்சக நட்சத்திர’ப் பிரிவின் கீழ் வரும்; அவிட்டம்,சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய ஐந்தும் பொதுவாக ‘பஞ்ச தோஷங்’களுக்குரியவை என விலக்கப்படுவதும் உண்டு!

மற்றொரு தொகுதியான, ‘தக்த நட்சத்திர’ப் பிரிவில்; குறிப்பிட்ட ஓர் ’நட்சத்திரமும் – நாளும்’ இணைந்து வரும் நேரங்கள்  சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவையல்ல என விலக்கப்பட்டுள்ளன. இதன் கீழ்:- திங்கள் கிழமைகளில் வரும் சித்திரை நட்சத்திரமும்; செவ்வாயில்- உத்தராடமும்; புதனில்- அவிட்டமும்; வியாழனில்-உத்தரமும்; வெள்ளியில்- கேட்டையும்; சனியில்- ரேவதியும்; ஞாயிறில்- பரணியும் சேர்ந்துவரும் காலப்பகுதிகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறு சுப நிகழ்வுகளுக்கு ஏற்றவை எனச் சொல்லப்பட்டிருக்கும் நட்சத்திரத்தில், ஒருவர் ஓர் செயலை ஆரம்பிக்கும் போது, அந் நட்சத்திரம் அவரது ‘ஜன்ம’[பிறந்த] நட்சத்திரத்திற்கு உகந்ததாக உள்ளதா எனப் பார்க்கும் ‘தாரா பலன்’ முறையும் உள்ளது.

***********************

 

Advertisements

பஞ்சாங்கமும், பஞ்ச அங்கங்களும் -5

‘பிரபலன்’

[சென்ற மே 2010 ல் இத் தொடரின் நான்காவது பகுதி வெளியாகி இருந்தது.

இப்போது, நீண்ட இடைவெளிக்குப் பின் தொடரவிருக்கும் இக்கட்டுரையில்;  பஞ்ச அங்கங்களான நாள், நட்சத்திரம், திதி, கரணம், யோகம் என்பன குறித்த மேலும் சில விளக்கங்களையும், அவை மனிதர்களது அன்றாடச் செயல்களோடு  எவ்வாறு தொடர்பு படுத்தப்பட்டு உள்ளன என்பதையும்  தெரிந்து கொள்வோம்.]

மனித வாழ்வில் நட்சத்திரங்களின் பங்கு

ஒருவரது பிறந்த நட்சத்திரம் என்பது, அவர் பிறந்த சமயத்தில் விண்ணில் விரவிக் கிடக்கும் நட்சத்திரக் கூட்டங்களுள்; எதனை நமது உப கோளான ‘சந்திரன்’ கடந்து செல்கிறதோ அதுவேயாகும், என முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன்.

இந் நட்சத்திரங்கள்………    அஸ்வினி, பரணி, கார்த்திகை…..  என ஆரம்பித்து ரேவதியில் முடிகிறது. இங்கு பெயர் சூட்டப்பட்டுள்ள 27 நட்சத்திரங்கள் யாவும் உண்மையில் ‘ஒற்றை’ நட்சத்திரம் அல்ல.

ஒன்று முதல் நூறு வரையான நட்சத்திரங்களை உள்ளடக்கிய ‘விண்மீன் தொகுதிகள்’ [Constellations] இவை எனலாம்.

கீழுள்ள அட்டவணையில், இதனை ஓரளவு விளக்கும் வகையில் , நட்சத்திரத்தின் பெயர் அதனை அடுத்து அடைப்புக்குறியுள் அதன் எண்ணிக்கை; விண்ணில் அவை தோற்றும் உருவ அமைப்பு ; அவற்றுக்குரிய தேவதைகள் மற்றும் அவை இடம்பெற்றிருக்கும் விண்மீன் தொகுதிகள் என்பன தரப்பட்டுள்ளன.

நட்சத்திரம் 

Nakshatra

விண்மீன் தொகுதியின் அமைப்பு. உரிய தேவதை 

Thevathai.

வானியல் பெயர் 

Constellation’s Name[English]

01.அஸ்வினி[3] குதிரை முகம் அஸ்வினி குமாரர் Castor & Pollox
02.பரணி[3] குடுவை யமன் Arietis
03.கார்த்திகை[6] வெட்டுக்கருவி அக்னி Tauri
04.ரோகிணி[5] தேர் பிரஜாபதி Aldebaran
05.மிருகசீரிடம்[3] மானின் தலை சோமன் Orionis
06.திருவாதிரை[1] மணி ருத்திரன் Betelgeuse
07.புநர்பூசம்[5] வில் அதிதி Geminorium
08.பூசம்[3] பூ பிரகஸ்பதி Cancri
09.ஆயில்யம்[6] பாம்பு சர்ப்பம் Hydarae
10.மகம்[5] பல்லக்கு பித்ரு Leonis/Regulas
11.பூரம்[4] தொட்டில் முன் ஆர்யமான் Leonis
12.உத்தரம்[–] பின் கால்கள் பகன் Leonis
13.அத்தம்[5] கை சவிது Corvil
14.சித்திரை[1] முத்து த்வாஸ்த்ரு Spica/Virginis
15.சுவாதி[1] சஃபையர் வாயு Arcturus
16.விசாகம்[3] குயவன் சக்கரம் இந்திராக்னி Librae
17.அனுசம்[3] குடை மித்ர Scorpionis
18.கேட்டை[–] குடை இந்திரன் Antares
19.மூலம்[6] பதுங்கும் சிங்கம் நிருதி Scorpionis
20.பூராடம்[4] சதுரம் அபிதேவதை Saggitari
21.உத்தராடம்[–] சதுரம் விஷ்வ தேவதை Saggitari
22.திருவோணம்[3] அம்பு விஷ்ணு Aquarii
23.அவிட்டம்[4] முரசு வசு Delphini
24.சதயம்[100] பூங்கொத்து வருணன் Aquarii
25.பூரட்டாதி[4] கட்டிலின் முன் அஜாய்கபாதன் Pegasi
26.உத்திரட்டாதி[–] பின் கால்கள் அகிர்புத்யன் Andromedae
27.ரேவதி[3] மீன் பூஷா Piscium

பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பிரிவுகளிலும் இந் நட்சத்திரங்களின் பங்கு முக்கியமானது எனலாம். இதனை அடுத்தே திதி, யோகம், கரணம், நாள் என்பன வருகின்றன.

மகாபாரத காலத்திலேயே இந் நட்சத்திரங்கள் பற்றிய குறிப்புகள் பல இடங்களில் வருகின்றன. அவற்றுள் சுப அசுப காரியங்களுக்கான ‘காலங்கள்’ குறித்து விளக்கும் பகுதிகளோடு ஜோதிட சம்பந்தமான தகவல்களும் விரவிக்கிடக்கின்றன.

மகாபாரதத்தின் அனுசாசன பர்வத்தில், குந்தி புத்திரனான தர்மன் தன் பாட்டனாரான பீஷ்மரிடம் தானம் அளிப்பதற்குரிய சிறந்த நட்சத்திரங்கள் யாவை எனக் கேட்டதற்கு; அவர் [பீஷ்மர்] தானஞ்செய்வதில் ; இருபத்தேழு நட்சத்திரங்களுக்கும் உரிய பங்கினையும் விளக்கிக் கூறியுள்ளார்.

இதில்; குறிப்பிட்ட ஓர் நட்சத்திரத்தில் அதற்கு உகந்த பொருட்களைத் தானம் வழங்குவதன் மூலம், நாம் எண்ணும் செயல்களில் சுலபமாக வெற்றிகாண முடியும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

உதாரணமாக, சுவாதி நட்சத்திரத்தில், விலை உயர்ந்த பொருட்களைத் தானம் வழங்குவதன் மூலம்; ஒருவன் தான் அடைய நினைக்கும் புகழினை எளிதில் பெறலாம் எனவும்; ஆயில்ய நட்சத்திரத்தில் வெள்ளியால் செய்த காளையினைத் தானம் வழங்குவதன் வழியாக, ஒருவன் பயங்களில் இருந்து மீண்டு வசதியான வாழ்வினைப் பெறமுடியும் எனவும்……. இவ்வாறு எல்லா நட்சத்திரங்களும் ஒவ்வோர் வகையில் பெற்றிருக்கும் சிறப்புகள் இதில் கூறப்பட்டுள்ளன.

அன்று முதல் இன்றுவரை இந் நட்சத்திரங்கள் ; புரோகிதர்களாலும், ஜோதிடர்களாலும் பல வழிகளில் ‘பலன்’ கூறப் பயன்பட்டுவருகின்றன.

புரோகிதர்களுக்கு உரிய பஞ்சாங்கத்தில் ‘நாள் காரியங்கள்’ இவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப் படுகின்றன. அதே சமயம் ஜோதிடத்திலும் இவை பற்றிய விளக்கங்கள் காணப்படுகின்றன. எனினும் பஞ்சாங்கத்தில் இதன் பங்கு அன்றாடச் செயல்களுக்குரிய நேரத்தை அல்லது காலத்தைத் தீர்மானிப்பதோடு நிறைவு பெறுகின்றன.

பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்டும்போது அதன் முதல் எழுத்து எவ்வாறு அமைதல் சிறப்பு என்பதில் ஆரம்பித்து அக்குழந்தை திருமண வயதை எட்டும் போது ‘நட்சத்திரப் பொருத்தம்’ பார்ப்பது போன்றவற்றுக்கும், ஏடெழுதுதல், புதுக்கணக்கு, திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கும் இந் நட்சத்திரங்கள் பெரிதும் துணையாக இருக்கின்றன.

எனினும், ஜோதிடத்தில் இதன் பயன்பாடு மிகுதியாக உள்ளது எனலாம்.

பிறப்பு நட்சத்திரத்தை ஒட்டிய பலன் கூறுவது, நட்சத்திர ரீதியிலான கோள்சார (கோச்சார) பலன் சொல்வது, கிரகங்கள் அமைந்திருக்கும் நட்சத்திரங்களை ஆராய்ந்து பலன் கூறுவது என பல வழிகளில் இந் நட்சத்திரங்களின் பங்கு விரிவடைகிறது. இக்கட்டுரையில், பஞ்சாங்கத் தேவைகளை-அதாவது, நாள் காரியங்களை- ஒட்டிய விபரங்களில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

[ 05-02-2011 ‘ஈழநேசன்’ இணைய இதழில் வெளியாகியது]

பஞ்சாங்கமும் பஞ்ச அங்கங்களும்.. பகுதி-4 [09-05-2010 ‘ஈழநேச’னில் வெளியாகியது]

பஞ்சாங்கமும்,பஞ்ச அங்கங்களும்- பகுதி -4

‘பிரபலன்’

ஏறக்குறைய ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் ‘மகா பாரத’த்தின் இறுதிக் கட்டமான யுத்த களத்தின் நடுவே ‘பரந்தாமன் –பார்த்தனு’க்கு அருளியது கீதை!

அதன் பத்தாவது அத்தியாயத்தின், இருபத்தொராவது சுலோகம்,

 

आतित्यानामहं विस्नूम् जोतिषाम् रविरंसुमान्।

मरीचिर् मरुतामस्मि नक्षत्राणामहं शशी॥

‘ஆதித்யானா மஹம்விஷ்ணு ர்ஜ்யோதிஷாம் ரவிரம்சுமான்;

மரீசிர் மருதா மஸ்மி நக்ஷத்திராணா மஹம் சசீ.’

[பகவத் கீதை அத்-10;சுலோ-21]

என்பதாகும்.

இந்தச் சுலோகத்தின் வழியாக, பார்த்தசாரதியான கிருஷ்ணன் “மாதத்திற்கு ஒருவர் என்னும் வகையில், பன்னிரு மாதங்களுக்கும் உரிய, அம்சு முதல் பூஷா வரைக்குமான ஆதித்தியர்களுள், நான் ‘விஷ்ணு’வாகவும்; ஒளி தருபவைகளுள் கதிர்களை உடைய கதிரவன் ஆகவும்; வாயு தேவதைகள் என வழங்கப்படும் நாற்பத்தொன்பது மருத்து தேவதைகளுள் நான் மரீசி ஆகவும்; நட்‌ஷத்திரங்களுள் சசி என்று அழைக்கப்படும் சந்திரனாகவும் நான் இருக்கிறேன்” என்று பகர்வதைக் காண்கிறோம்.

இதற்குப் பலர் பலவகையான விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். சந்திரன்; பூமியின் உப-கோளாக இருக்கையில்; கண்ணன் அதனை ‘நக்ஷத்திரம்’ எனக் குறிப்பிடுவது, நவீன அறிவியலுக்குப் பொருத்தமற்ற ஒன்று என்பவர்களும் உண்டு!

அதே சமயம், இந்தக் ’கிரக’ என்னும் பதம், வேத காலத்தில் ‘கவரும் தன்மையுள்ள’ என்னும் பொருளில் வழங்கப்பட்டுவந்தது. பின்னர் மேற்குலக அறிவியலின் தாக்கம் ஏற்பட்டபோது, ’அதிசயம்’ என்னும் கருத்தினை வெளிப்படுத்திய கிரேக்கச் சொல்லான ‘planie’ அந்த இடத்தினைப் பிடித்துக் கொண்டது. அதுவே planet ஆகி, சூரிய மண்டலத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் பூமி முதல் புளூட்டோ வரை கிரகங்களாக அழைக்கப்படலாயின.

ஆனால், அன்றுமுதல் ,மானுடன் ஒருவனது பிறந்த ‘நக்ஷத்திரம்’ என்பது, சந்திரன் அந் நேரத்தில் கடந்து செல்லும் ந‌க்ஷத்திரக் கூட்டமே என்னும் வழக்கமான பொருளில்தான் அதனைப் பரந்தாமன் அவ்வாறு குறிப்பிட்டிருக்க வேண்டும்! ஏனெனில் கீதை,பரம்பொருளினால் மானுடனுக்கு அருளப்பட்டதல்லவா?

அது மட்டுமல்லாது, மகாபாரதத்தில்; பல இடங்களில் ந‌க்ஷ த்திரங்கள் பற்றிய குறிப்புகளும் , அவற்றுக்கான பலன்களும் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சிறிய அறிமுகத்தோடு, நாம், பஞ்ச அங்கங்களின் மற்றொரு அங்கமான –நக்ஷத்திரம்’ பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.

ஒருவரது ‘நட்சத்திரம்:-

பொதுவாக மிகுந்த தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள்தாம் ‘ஜோதிடத்தின்மீதும் நம்பிக்கை கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

ஒருவர் தனது பிறந்த நாளின் போதோ அல்லது ‘விஷேச’காரியங்களின் போதோ தமது நட்சத்திரத்தின் பெயரால், இறைவனுக்கு ‘அர்ச்சனை’ செய்வதை; மேற்சொன்ன ‘தெய்வ நம்பிக்கை’ உடையவர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம், அவர்கள் தங்கள் பெயரோடு தாம் பிறந்த நட்சத்திரத்தின் பெயரையும் சேர்த்து ‘அர்ச்சக’ரிடம் கூறி , அவர் வாயால் தமது பெயரையும்;நட்சத்திரத்தினையும் ‘இறைவனிடம்’ அவர் பிழையின்றிக் கூறுகிறாரா என்பதை  மிகுந்த ‘எச்சரிக்கையுடன்’ கவனிப்பதையும் பார்த்திருக்கிறோம்.

இங்கே நமது பெயரையும், நட்சத்திரத்தையும் அர்ச்சகர் மூலம் ஆண்டவனுக்குத் தெரிவித்தால் மட்டுமே அதனை அவர் அறிந்து கொள்வார்.இல்லையேல் ‘நம்மைப் படைத்த ‘ இறைவனாலேயே அதனைத் தெரிந்து கொள்வது சிரமமான செயல், என்றெல்லாம் ‘விதண்டா வாதம்’புரிவது எனது நோக்கமல்ல!

எனவே ,விஷயத்துக்கு வருகிறேன்.

அதாவது, நமது ‘பிறந்த நட்சத்திரம்’ என்று நாம் எதனைக் குறிப்பிடுகிறோம்?

இதற்கு ஒரே வரியில் பதில் சொல்வதாயிருந்தால்…. ”நாம் பிறந்த சமயத்தில், சந்திரன்  எந்த நட்சத்திரத்தினைக் கடந்து கொண்டிருந்ததோ அல்லது எந்த நட்சத்திரக்கூட்டம் அச்சமயத்தில் சந்திரனின் பின்னால் ‘வான் வெளியில்’ இருந்ததோ அதுவே நமது பிறந்த நட்சத்திரம்” என்று கூறிவிடலாம்.

இதேபோன்று, சூரியனைச் சுற்றிவரும் கோள்கள் யாவும் அவற்றின் பின்னால், இந்தக் ‘கற்பனை விண் திரை’யில் விரவிக்கிடக்கும் நட்சத்திரங்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றன. அவ்வாறு, அவை கடந்து செல்லும் நட்சத்திரம் எதுவோ அது அக் கிரகத்தின் ‘சாரம்’ என்றும், அக் கிரகம் அந் நட்சத்திரத்தில் இயங்குகிறது என்றும் குறிப்பிடுவார்கள்.

எனவே, விண்ணில் உலாவும் நமது சூரிய மண்டலக் கோள்களையும், அதற்கும் அப்பால் ஒளிர்ந்துகொண்டிருக்கும் நடசத்திரங்களையும் தொடர்புபடுத்தி உருவாக்கப் பட்ட ஜோதிடத்தில், கிரகங்களைப்போன்றே நட்சத்திரங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

பஞ்சாங்கத்திலும் இந்த ‘நட்சத்திரங்’கள் முக்கிய இடத்தினை வகிக்கின்றன.

நட்சத்திரங்களும் மாதங்களும்:-

இந்த நட்சத்திரங்களும் அவற்றின் பெயர்களும் இன்று ‘ஜோதிடத்தில்’ பெற்றிருக்கும் முக்கியத்துவம் ஒருபுறமிருக்க, நமது ‘இந்திய மாத’ங்களது பெயர்கள் அனைத்தும் இவற்றோடு ஏதோ ஒருவகையில் தொடர்பு  கொண்டிருக்கின்றன என்பதே உண்மை!

அதற்கு, இந்திய ‘காலக் கணிப்பு’ பெரும்பாலும் சந்திரனை ஒட்டியதாக அமைந்துள்ளதும் ஒரு காரணம் எனலாம்.

நட்சத்திரம் என்பது குறிப்பிட்ட ஒரு நாளில் சந்திரன் தங்கும் இடம்

என்பதுவே பொருத்தமானதாகும்.இதனை ஆங்கிலத்தில்  Lunar Mansions என்பார்கள்.

அதாவது, சந்திரன் ,பூமியைச் சுற்றிவரும் சமயத்தில், ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு நட்சத்திரத்தினை (அல்லது நட்சத்திரத் தொகுதியை)க் கடந்து வருகிறது ஆகையால், அதனைச் சந்திரன் அந்த நாளில் தங்கும் இடம் என்று குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு மொத்தம் உள்ள இருபத்தேழு நட்சத்திரங்களையும் சந்திரன் கடந்து செல்ல எடுக்கும் காலம் நமது ‘ஹிந்து மாதம்’ ஆகும்.இதனை ஒட்டியே புராணத்தில்; தட்சனின் இருபத்தேழு பெண் மக்களையும் சந்திரன் மணம் செய்து, நாளொன்றுக்கு ஒவ்வொரு மனைவியின் இருப்பிடத்திலும் கழிப்பதாகக் கதை பிறந்தது.

எனவே, இந்த நட்சத்திரங்களும், நாள்களும், பின்னர் அவற்றினை ஒட்டிய மாதங்களும் எமது முன்னையோர் உருவாக்கிய ‘காலக் கணிப்புகளே’. அவை அனைத்துக்கும் பின்னணியில் ‘அறிவிய’லே’ இடம்பெற்றிருந்தது!

கிரகங்களை ஒட்டி, நாள்களது பெயர்கள் இடப்பட்டது போன்று, இருபத்தேழு நட்சத்திரங்களையும், சந்திரன் கடந்து வரும் காலத்தை ‘மாதம்’ எனக் கொண்டு அவற்றுக்கான பெயர்கள் உருவாக்கப்பட்டன.

பொதுவாக ஓர் நட்சத்திரம் சுமார் இருபது முதல் இருபத்தாறு மணித்தியாலங்களுக்குள் அமைந்திருப்பதைக் காணமுடியும்.

ஒவ்வொரு தடவையும் சந்திரன்,  இருபத்தேழு நட்சத்திரங்களையும் கடந்து முடிக்கும் சமயத்தில், முப்பது திதிகளையும் நிறைவு செய்து விடுகிறது. எனவே இச் சந்திர மாதத்தில் ஓர் அமாவசையும், ஒரு பூரணையும் (பௌர்ணமி) இடம் பெற்று பிரதமை முதல் சதுர்த்தசி வரையான பதின் நான்கு திதிகளும் இருதடவைகள் வந்து சென்றுவிடும்!

இங்கு, பூரணை வரும் நாளின் நட்சத்திரத்தினை ஒட்டியே அம் மாதத்திற்குப் பெயர் இடப்பட்டுள்ளது!

அண்மையில், நிகழ்ந்த சித்திரா பௌர்ணமியை  மறந்திருக்க மாட்டீர்கள்.

சித்திரையில் ஏற்பட்ட பௌர்ணமி என்பதால் அதற்குச் சித்திரா பௌர்ணமி எனப் பெயரிடப்பட்டதாகச் சிலர் நினைத்திருக்கலாம். உண்மையில், சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி ஏற்பட்டமையால் அந்த மாதத்திற்குச் சித்திரை மாதம் என்று பெயர் வந்தது!

அது போன்று, விசாக நட்சத்திரத்தில் ( வைசாக்) பௌர்ணமி வரும் மாதம் வைகாசி அல்லது வைசாக் என அழைக்கப்பட்டது.

உத்தர நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும் மாதம் பங்குனி ஆயிற்று. உத்தரத்தினை வட மொழியில் உத்தர பல்குனி என வழங்குவர்.அதில் உள்ள பல்குனி; பங்குனி ஆயிற்று!

மாசியை- வட மொழியில் மாகம் என்பர். அது மாக (மகம்) நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும் மாதம் ஆகும்.

பௌசம்-பூசம் நட்சத்திரத்தில் பூரணை ஏற்படும் மாதம் என்பதால் ‘பௌச மாதம்’ (தைப் பூசம்) தை மாதம் ஆயிற்று.

மிருகசீரிட நட்சத்திரத்தில் பூரணை ஏற்படும் மாதம் ‘மிருகசீரிஷ்’- அதுவே மார்கழி என்றாயிற்று. கார்த்திகை நட்சத்திரத்தில் பூரணை வரும் மாதம் கார்த்திகை (கிருத்திக) மாதம்…… இவ்வாறு நட்சத்திரங்களின் பெயர்களே பன்னிரு மாதங்களின் பெயர்களாக நிலை பெற்றிருக்கிறது.

வாசகர்களது ஆர்வத்திற்கு மதிப்பளித்து, மாதங்களின் பெயர்களையும் அவற்றின் [வட மொழி சார்ந்த] நட்சத்திர விபரங்களையும் கீழே பட்டியலிட்டுள்ளேன்.

பௌர்ணமி வரும்

நட்சத்திரம்

இந்திய/ஹிந்து மாதங்கள் ஆங்கிலமாதங்கள்
சித்திரை[சித்திர] சித்திரை[சைத்ர] ஏப்ரில்/மே
விசாகம்[வைசாக][ வைகாசி[ வைசாக்] மே/யூன்
கேட்டை[ஜேஷ்ட்ட] ஆனி [ஜேஷ்ட்ட] யூன்/யூலை
பூராடம்[பூர்வ ஆஷாட] ஆடி [ஆஷாட] யூலை/ஓகஸ்ட்
திருவோணம்[ஷ்ராவண்] ஆவணி[ஷ்ராவண்] ஓகஸ்ட்/செப்ரெம்பர்
பூரட்டாதி[பத்ர பாட்] புரட்டாசி[பாத்ர] செப்ரெம்பர்/ஒக்ரோபர்
அசுவினி[அஸ்வின்] ஐப்பசி[அஸ்வின] ஒக்ரோபர்/நொவெம்பர்
கார்த்திகை[கிருத்திக] கார்த்திகை[கார்த்திக்] நொவெம்பர்/டிசெம்பர்
மிருகசீரிடம்[ம்ருகசீரிஷ்] மார்கழி[மார்கசீர்ஷ] டிசெம்பர்/ஜனவரி
பூசம்[பௌஷ] தை [பௌஷ்] ஜனவரி/பெப்ரவரி
மகம்[மாக] மாசி[மாக] பெப்ரவரி/மார்ச்
உத்தரம்[உத்தரபல்குனி] பங்குனி[பல்குண] மார்ச்/ஏப்ரல்

 

இந்துக்களது வாழ்க்கையோடு இந் நட்சத்திரங்கள் பலவழிகளில் தொடர்பு படுத்தப்பட்டுள்ளன. இவை குறித்து இனிவரும் கட்டுரைகளில் பார்ப்போம்.

 

 

 

 

 

 

பஞ்சாங்கமும் பஞ்ச அங்கங்களும்-பகுதி 3[30-04-2010 ‘ஈழநேசனில் வெளியானது]

பஞ்சாங்கமும் பஞ்ச அங்கங்களும்; பகுதி- 3

பிரபலன்”

செனற வாரக் கட்டுரையில், பூமியின் வெவ்வேறு இடங்களில், ஓர் நாளின் சூரிய உதயம்,அஸ்தமனம், பகல்மானம், இரவுமானம் என்பன எவ்வாறு வேறுபட்டிருக்கின்றன என்றும்,அவற்றினை ஒட்டிய (பஞ்சாங்க) ஓரைகளது விபரங்களையும் பார்த்தோம்.

பஞ்ச அங்கங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ள  ‘நாள்’ ; பூமி தனது அச்சில்  ஒரு தடவை சுழன்றுமுடிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு என்பதையும், அது குறிப்பிட்ட   ஓரிடத்தில் (உ.ம்;- அவுஸ்த்ரேலியா-மெல்பெர்ண்) அடுத்தடுத்து நிகழும் சூரிய உதயங்களுக்கு இடையில் உள்ள நேரம் எனவும் கண்டோம்.

இச் சூரிய உதய-அஸ்தமன நேரங்களும், அவற்றோடு கூடிய பகல்-இரவு மானங்களது கணிப்பும்  ‘வானியல்’ [ASTRONOMY] குறித்த அறிவின்’ பின்னணியை உடையதாகும். இவ் வானியல் தரவுகளின் உதவியோடுதான், பஞ்சாங்கத் தரவுகள் பலவும் கணிக்கப்படுகின்றன.

வாக்கியமும்,திருக்கணிதமும்:-

எனவே பஞ்சாங்கங்களிடையே வாக்கியம்;திருக்கணிதம் என வேறுபாடுகளிருப்பினும்; இயல்பாகவே நிகழும் பூமியின் சுழற்சி மற்றும் சூரியனை அது சுற்றிவரும் பாதை என்பனவற்றோடு தொடர்புடைய சூரிய உதய-அஸ்தமனக் கணிப்புகளில் வேறுபாடு ஏற்படமாட்டாது.அவ்வாறு ஏற்படின் அவை சம்பந்தப்பட்ட ‘பஞ்சாங்க’த்தின் தவறாக இருக்கலாமேயன்றிச் சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களது இயக்கங்கள் சார்ந்தவையாக அமைய மாட்டாது !

இப்போது பயன்பாட்டில் உள்ள பஞ்சாங்கங்கள் ஒவ்வொன்றிலும் நட்சத்திரம்,திதி போன்றவை; ஆரம்பமாகும் நேரங்களும்,முடிவுறும் நேரங்களும் முன்னுக்குப்பின் முரணாகக் குறிப்பிடப் பட்டிருப்பதைச் சிலர் கவனித்திருக்கக் கூடும். அதன் காரணத்தால், எந்தப் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் எனது சூரிய உதய-அஸ்தமனத் தரவுகள் கணிக்கப்படுகின்றன என்னும் கேள்வி சிலருக்கு எழலாம்!

இது போன்ற சந்தேகம், ஆரம்பத்தில் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. காரணம், இந்திய ‘ஜோதிட’த்தில்  நட்சத்திரம், மற்றும் கிரகங்களது கோண அளவுகள் யாவும் ‘அயனாம்ச’ அளவீட்டினுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பஞ்சாங்கங்களில் இடம்பெறுகின்றன. இந்த அயனாம்சக் கணிப்பில் வாக்கிய பஞ்சாங்கமும்,திருக்கணிதமும் வேறுபட்டிருக்கின்றன. இதே போன்று கே.பி;  இராமன்; லஹிரி எனப் பல வகையான ‘அயனாம்சக் கணிப்புகள்’ இப்போது புழக்கத்தில் உள்ளன. இதன் காரணமாகப் பஞ்சாங்கத்துக்குப் பஞ்சாங்கம் ஒருவரது பிறந்த நட்சத்திரத்தினைக் கூட முன்பின்னாகக் குறிப்பிடும் நிலை உள்ளதால், சாதாரண வாசகன் இதனால் குழப்பமடைவது இயல்பானதே.

அதுவும், ஒரு நட்சத்திரத்தின் ஆரம்பத்திலோ அல்லது அந் நட்சத்திரம் முடிவுறும் சமயத்திலோ பிறக்கும் ஒருவர் இதுபோன்ற குழப்பங்களில் மாட்டிக்கொள்ள நேரிடுகிறது!

வாக்கிய பஞ்சாங்கத்தைக் கையில் வைத்திருக்கும் ‘குருக்கள்’ அல்லது ‘ஜோதிடர்’ ஒன்றைச் சொல்ல; திருக்கணித பஞ்சாங்கத்தை வைத்திருப்பவர் வேறொன்றைச் சொல்வார். இதனால் எந்தப் பஞ்சாங்கம் சொல்வதை நம்புவது என்னும் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது !

பஞ்சாங்கம் கணிப்பதில், வாக்கியம்/திருக்கணிதம் என இரண்டு பிரதான முறைகள் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் வாக்கிய பஞ்சாங்கம், சூரிய சித்தாந்தத்தின் அடிப்படையிலும், திருக்கணிதம் நவீன அறிவியலின் துணையோடும் கணிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

பண்டைக் காலந்தொட்டு,நமது முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட வாக்கியத்தில், பஞ்சாங்கத்துக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இது ‘காலங்களை உணர்ந்த’ ஞானிகளால் உரைக்கப்பட்டது என்னும் பொருள் அதன் பெயரிலேயே வெளிப்படுவதை அவதானிக்கலாம். முன்னோர் ‘வாக்கினை இயம்பும்’ பணியினை இது தொடர்ந்து பின்பற்றிவருகிறது என்பதே பொருத்தமானதாகும்!

சூரிய சித்தாந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவுகளும், இன்றைய ‘வானியல்’ குறிப்பிடும் தரவுகளும் பெரும்பாலும் ஒத்திருப்பதைக் காண்கையில், நவீன கருவிகளின் உபயோகம் ஏற்பட்டிராத காலத்திலேயே, நமது முன்னோர் இந்தப் பிரபஞ்ச இயக்கம் பற்றி எவ்வாறு அறிந்தார்கள் என்பது வியப்பானதுதான்!

இப்போது, பூமி-சூரியன்-சந்திரன் இம்மூன்றினதும் இயக்கங்கள் தொடர்பான மேலும் சில வானியல் சார்ந்த விபரங்களை இங்கு தருகிறேன்.

சில அடிப்படைத் தகவல்கள்:

நமது பூமி, சூரிய மண்டலத்தில் இடம்பெற்றுள்ளதோடு இரு வகையான இயக்கங்களையும் கொண்டுள்ளது. அது, தனது அச்சில் சுழன்றுகொண்டிருப்பதுடன், சூரியனையும் சுற்றிவருகிறது என்பதை எமது ஆரம்பகால கல்வியின்போதே படித்திருக்கிறோம்.

இங்கு, பூமி,சூரியனைச் சுற்றிவரும் நீள் வட்டப் பாதை அமைந்துள்ள தளத்திற்கு ( இதனை ஆங்கிலத்தில் Eliptical Plane எனக் குறிப்பிடலாம்) 23.5 பாகை சாய்வாக, அதன் மேல் (வட)முனை எப்போதும் வட துருவ நட்சத்திரக் கூட்டங்களை நோக்கியவாறு (POLARIS) சுழல்கின்றது. இது தன் அச்சில் சுழல்வதால் இரவு-பகல் சேர்ந்த நாளினையும், அதே சமயம் சூரியனைச் சுற்றுவதால் பருவகாலங்களைக் (Seasons) கொண்ட வருடத்தினையும் எமக்குத் தருகிறது.

இதற்கு மற்றொரு இயக்கமும் உள்ளது. தன் அச்சில் சுழலும் பூமி உண்மையில் ஓர் பம்பரம் போன்று செயல்படுகிறது.பொதுவாகப் பம்பரம் சுழலும்போது அதன் மேல் முனையும் ஓர் வட்டப்பாதையை ஏற்படுத்துவதைக் கண்டிருக்கிறோம். அதே போன்று நமது பூமியும், தனது வடமுனை நோக்கிய பகுதியில் மிகப்பெரும் ‘மாய வட்டத்தினை’ உருவாக்கவே செய்கிறது. ஆனால் இதுபோன்ற முழு வட்டம் ஒன்றை  உருவாக்குவதற்குச் சுமார் 26,000 வருடங்களை அது எடுத்துக் கொள்கிறது ! அதாவது, இன்று பூமியின் வடமுனை வட துருவத்தில் எந்தப் புள்ளியினை நோக்கியிருக்கிறதோ அதே புள்ளியினை மீண்டும் 26000 வருடங்களின் பின்னர் வந்தடையும்.!

இந்தக் குறை பாட்டினை நிவர்த்தி செய்யும் பொருட்டே ‘அயனாம்ச திருத்தத்’தினை உருவாக்கியுள்ளனர். இவ் ‘அயனாம்ச’ அளவுகள் பெரும்பாலும் இந்திய ஜோதிடம் தொடர்பான கணிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.

எனினும், இந்தப் பூமியின் அச்சு ஏற்படுத்தும் இம் மாய வட்டம் எமது அன்றாட வாழ்வில் நாம் கடந்து செல்லும் சூரிய உதய-அஸ்தமன நிகழ்வுகளையோ, வருடத்தின் பருவ காலங்களையோ பாதிப்பதில்லை. எனவே இன்றைய நாளின் சூரிய உதய-அஸ்தமன நேரங்களே பெரும்பாலும் அடுத்த வருடம் இதே நாளில் ஏற்படும்.

மற்றொரு புறத்தில்; பூமி, சூரியனைச் சுற்றிவரும் நீள் வட்டப் பாதையும் எப்போதும் ஒன்றாகவே இருப்பதில்லை. அது, சூரியனைச் சுற்றிவர எடுக்கும் கால அளவு மாறுபடுவதில்லை எனினும், அதன் பாதை, ‘சற்று நீள் வட்ட வடிவப் பந்தின்’மீது சுற்றப்பட்டிருக்கும் நூலைப் போன்று தோற்றமளிக்கும்!

மேலும், இயங்கும் பொருட்கள் அனைத்தும், அவற்றின் இயக்கம் சார்ந்தும் அவற்றைச் சுற்றியுள்ள ஏனைய கோள்களின் தாக்கத்தினாலும்,காலப் போக்கில் அவற்றின் பாதைகளில் சிறிய அளவில் மாற்றங்களை அடைகின்றன. இதற்கு, நமது பூமியும் விலக்கல்ல. சுமார் நூறாயிரம் ( அதாவது ஒரு லட்சம்)  வருடங்களில் பூமியின் சுற்றுப்பாதை எவ்வாறு அமையும் என்பதை இன்றைய ‘வானியல் அறிவு’மூலமாக நாம் அறிந்து கொள்ளமுடியும்.( பட விளக்கம் பார்க்கவும்)

இன்றைய அறிவியல், சூரியன்-பூமி-சந்திரன் இம்மூன்றினதும் இயக்கங்கள் குறித்த துல்லியமான தரவுகளை எமக்கு அளித்திருக்கிறது.

நீள் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வரும், நமது பூமி ஒவ்வொருவருடமும் ஜனவரி 3 ம் நாளில் சூரியனுக்கு மிகவும் கிட்டிய தூரமான சுமார் 147,166,462 கி.மீ( 91,445,000 மைல் )தொலைவில் சஞ்சரிக்கும்.அதே போன்று, ஜூலை 4 ந் தேதியன்று, இவ்விரு விண் பொருட்களும் அவற்றுக்கிடையில் மிக அதிக தூரமான சுமார் 152,171,522 கி.மீ அல்லது 94,555,000 மைல் தொலைவில் சஞ்சாரம் செய்யும்.

இவை இரண்டிற்கும் இடையிலான சராசரித் தூரம் 149,597,871 கி.மீ ( 92,955,807 மைல் ) என வரையறை செய்யப்பட்டு அது ”ஒரு வானியல் அலகு” [ 1 AU- one Astronomical Unit ]எனவும் அழைக்கப்படுகிறது. பிரபஞ்சப் பொருட்களுக்கு இடையிலான தொலைவுகள் யாவும் இந்த வானியல் அலகிலேயே குறிப்பிடப்படுகின்றன.

நமது பூமி, சுமார் 365 நாள் 05 மணி 48 நிமி 46 செக்கன்ட்களில் சூரியனை ஒரு தடவை சுற்றி முடித்துவிடும். எனவே, ஒரு வருடம் என்பது 365.2422 நாள்கள் ஆகும்.

சூரிய ஒளி எமது கண்களை வந்தடைய 08 நிமி 19 செக்கண்ட்கள் ஆகிறது.அதாவது, சூரியன் உதித்துச் சுமார் 8.32 நிமிடங்களின் பின்னரே நாம்  சூரிய உதயத்தைக் காண்கிறோம்!

பூமி, சந்திரன் இவை இரண்டுக்கும் இடையில் உள்ள சராசரித் தொலைவு சுமார் 384,000 கி.மீ அல்லது 238,855 மைல்கள் ஆகும். இது 0.00257 AU வுக்குச் சமமாகும்.

இவற்றுக்கிடையே உள்ள கிட்டிய தொலைவு- இதனைப் ‘பெரிகி’(Perigee) என்பர்- 363,300 கி.மீ அல்லது 225,700 மைல்கள் [ 0.00243AU].அதே போன்று, மிகக் கூடிய தொலைவு – இதனை ‘அபோகீ’ (Apogee) என்பர்- 405,500 கி.மீ அல்லது 252,000 மைல்கள் [ 0.00271 AU] ஆகும்.

மேற்கூறிய தகவல்கள் யாவும் இன்றைய வானியலின் அடிப்படைப் புள்ளி விபரங்கள் எனலாம். இதனை ஆதாரமாக வைத்தே பஞ்சாங்கக் கணிப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன.ஆனால், இவற்றோடு இணைந்து சுப, அசுப நேரங்கள் எனவும்; ராகு காலம்-எமகண்டம்-குளிகன் எனவும் சில வாழ்வியல் தொடர்பான குறிப்புகளையும் இப் பஞ்சாங்கங்கள் அளிக்கின்றன.

பஞ்சாங்கமும் பஞ்ச அங்கங்களும்-பகுதி 2 [21-04-2010 ஈழநேசன் இணைய இதழில் வெளியானது]

பஞ்சாங்கமும் பஞ்ச அங்கங்களும்- பகுதி-2

“பிரபலன்”

பஞ்சாங்கக் கணிப்புகள் யாவும், சூரியன், சந்திரன், பூமி இவற்றின் இயக்கங்களின் தொடர்பினைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டவை என்பதைப் பார்த்தோம்.

இந்தப் பஞ்சாங்கக் கணிப்புகளும், ஏனைய கிரகங்களின் நிலைகளைக் கவனத்தில்கொண்டு கூறப்படும் ‘பலன்’களும் நமது பூமியினை நடுநாயகமாகக் கொண்டே ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சூரியமண்டலத்தில் உள்ள கோள்கள் அனைத்தும், சூரியனை நடுவாகக் கொண்டு சுற்றிவருகின்றன என்பதை அடிப்படை வானியல் தெரிந்தவர்களும் அறிவர். இதனைச் சூரிய மைய ( ‘ஹீலியோ சென்ட்றிக்’ Helio-centric) அமைப்பு அல்லது மாதிரி எனக் கூறுவர்.

அதேசமயம், பூமியினை நடுவாகக் கொண்டு, சூரியனுட்பட ஏனைய கோள்கள் யாவற்றினதும் இயக்கங்களைக் கணிக்கும் முறையினை ‘ஜியோசெண்ட்றிக்’ (Geo-centric) அமைப்பு அதாவது ‘புவி மைய மாதிரி’ எனக் குறிப்பிடுகிறார்கள். இது ஒருவகையில் பூமிசார்பாக ஏனைய கிரகங்களது இயக்கங்களைக் கணிக்கும் சார்பு நிலைக் கணிப்பு எனலாம்.

இக்கொள்கையினையே பஞ்சாங்கங்களும், நமது ஜோதிட நூல்களும் பின்பற்றிவருகின்றன.

இதன் அடிப்படையில் தான் சில கோள்கள் சில சந்தர்ப்பங்களில் ‘பின்னோக்கி’ அதாவது ஜோதிடபாஷையில் சொல்வதாயின் ‘வக்ரகதியில்’ செல்வதாயும், வேறு சில சமயங்களில் அதிவேகத்தில் முன்னோக்கி ( அதிசாரம்) செல்வதாயும் குறிப்பிடப்படுகிறது.

எல்லாக் கிரகங்களும் இடமிருந்து வலமாக (வலஞ்சுழி)ச் சஞ்சரிக்கின்றன, ராகுவும், கேதுவும் இதற்கு எதிரிடையாக இடமிருந்து வலமாக இயங்குகின்றன.

இந்த ஆரம்ப விளக்கங்களோடு, பஞ்சாங்கத்தில் முதலாவதாகச் சொல்லப்பட்ட ‘நாள்’ பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.

நாள்-வாரம்:-

பூமி தனது சுழற்சியின்போது, அதன் ஓர் புள்ளியில் ஏற்படும் முதல் சூரிய உதயத்துக்கும், அதே இடத்தில் அடுத்த தடவை ஏற்படும் சூரிய உதயத்துக்கும் இடைப்பட்ட காலத்தையே நாம் நாள் என்கிறோம். இது, சுமாராக 24 மணித்தியாலங்களாகும்.

பூமியின் அச்சு சாய்வாக இருப்பதன் காரணமாக  பகல்-இரவு நேரங்கள், நாளுக்கு நாள் வேறுபட்டிருப்பதைக்   காணலாம்.. பூமியின் வடதுருவத்தையும், தென் துருவத்தையும் ஒட்டிய பகுதிகளில் ஓர் நாளின் பகல்- இரவு  நேரங்களுக்கிடையே இவ்வேறுபாடு அதிகமாக இருப்பதையும் அவதானிக்க முடியும். பொதுவாக ஒரு நாளின் பகல்பொழுதினைப்  ‘பகல் மானம்’ எனக் குறிப்பிடுவர்.

இதே போன்று, சூரிய அஸ்தமனத்துக்கும், அதனை அடுத்து நிகழும் சூரிய உதயத்துக்கும் இடைப்பட்ட பகுதியை இரவு என அழைப்பது போன்று அதன் கால அளவை ‘இரவு மானம்’ எனவும் குறிப்பிடுவர்.

பஞ்சாங்கத்தில் – சூரிய உதயம்; நண்பகல் ; சூரிய அஸ்தமனம்; பகல் மானம் ( இதனை அகஸ் என்றும் அழைப்பர்) என்பன தரப்பட்டிருக்கும்.

நாள் குறித்த அடிப்படை அறிவு ஏற்பட்டதும், அவற்றுக்குப் பெயரிடும் வழக்கம் உருவாகியிருக்கவேண்டும்.

அவ்வாறு, பெயரிடும் சமயத்தில், தினந்தோறும் புவி மாந்தர்களின் கண்களுக்குக் காட்சி தருவதோடு பகல் பொழுதின் நாயகனாகவும் அமைந்திருக்கும் சூரியனது பெயரை முதலாவதாகச் சூட்டியிருக்கிறார்கள்!

அதனைத் தொடர்ந்து, இரவின் நாயகனாக இருக்கும் சந்திரனது பெயரை அதற்கடுத்த நாளுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

இவற்றில், சூரியனையும், சந்திரனையும் குறிக்கும் ஞாயிறு, திங்கள் இவை இரண்டினையும் அடுத்து வருவது செவ்வாய். இது சந்திரனை அடுத்துப் பூமிக்கு மிக அருகில் இடம் பெறும் கிரகமாகும்.

தொடர்ந்து, புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி எனக் கிழமை நாட்களின் பெயர்கள் இடப்பட்டிருக்கின்றன.

வாரத்தின் ஏழு நாட்களும், சூரிய மண்டலத்தில் உள்ள ஏழு கோள்களினதும் பெயர்களைக் கொண்டிருப்பதானது, ஆரம்ப காலந்தொட்டே மனிதன் தனது அன்றாடச் செயல்களோடு ஏதோவொரு வகையில் கோள்களைத் தொடர்புபடுத்தி வருவதை உணர்த்துகிறது!

ஓரை:-

இவ்வாறு நாள்களது பெயர்கள் அவற்றின் பகல்-இரவுக் கால அளவுகள் என்பன குறித்த அறிதலினைத் தொடர்ந்து, ஓர் நாளினை மேலும் பல பிரிவுகளாகப் பிரித்து அவற்றுக்குப் பெயரிட்டதோடு அவ்வாறு பிரிக்கப் பட்ட பகுதிகளில் எந்தெந்தப் பகுதிகள் எத்தகைய செயல்களுக்குச் சாதகமானவை என்னும் கணிப்பினையும் உருவாக்கிக் கொண்டனர்.

இதன்படி, ஒரு நாள் 24 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவை ஒவ்வொன்றும் ‘ஓரை’ என அழைக்கப்பட்டது. இந்த ‘ஓரை’ என்னுஞ் சொல்

வடமொழியில் உள்ள ‘ஹோரா’ என்பதில் இருந்து உருவானதாகும். இதுவே காலப் போக்கில் உலக நேர அளவான ‘HOUR’ ஆக நிலைபெற்றுவிட்டது.

ஓரை என்பது இன்றைய கால அளவில் ஒரு மணித்தியால நேரம் ஆகும்.இதே போல் 24 ஓரைகளைக் கொண்டது ஓர் நாள்.

இந்தியப் பஞ்சாங்க முறைப்படி, இவ் ஓரைகள் யாவற்றுக்கும் கிரகங்களது பெயர்கள் இடப்பட்டு; அவையாவும் ஓரொழுங்கில்-ஒன்றை அடுத்து மற்றொன்றாக- வரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.

நாள்களுக்குப் பெயரிடும் போது, சூரியனது பெயரினை ‘வார’த்தின் ஆரம்ப நாளுக்குச் சூட்டியதைப் போன்று, சூரியனைக் குறிக்கும் ஞாயிற்றுக் கிழமையின் ஆரம்ப ஓரை ‘சூரிய ஓரை’ எனக் குறிப்பிடப்பட்டது.

இவ்வோரைகள் ; சூரியன்;சுக்கிரன்; புதன் ; சந்திரன்; சனி; குரு; செவ்வாய் என்னும் ஒழுங்கில் தொடர்ந்து இடம்பெற்றுவரும்.இவ்வாறு தொடர்ந்து 24 ஓரைகளும் முடிவடையும்போது, அடுத்த நாள் ஆரம்பமாகிவிடும்.

அதாவது, ஞாயிற்றுக்கிழமையில் இடம்பெறும் 24 ஓரைகளையும் நாம் மேற்குறிப்பிட்ட சூரியன்…… சுக்கிரன்…… என்னும் வரிசையில் தொடர்ந்துவரின், அதன் மறு நாளான திங்ககிழமையின் ஆரம்ப ஓரை ‘சந்திரன்’( திங்கள் ) என வரும்!

இவ்வாறே ஒவ்வொரு நாளும் அந் நாளின் பெயரைக் கொண்ட ஓரையுடன் ஆரம்பிப்பதைக் காண்பீர்கள்.

இங்கு, இவ் ஓரைகளைக் கணிக்கும்போது, பகல்மானத்தைப் பன்னிரெண்டாகப் பிரித்து அவற்றைப் பகல் நேர ஓரைகளாயும்; அதே போன்று,அன்றைய இரவுமானத்தைப் பன்னிரெண்டாகப் பிரித்து அன்றைய இரவு நேரத்துக்கான ஓரைகளாயும் கொள்ளவேண்டும்.

எனவே இவ் ஓரைகளது ‘கால அளவு’ம் இடத்துக்கிடம்- நாளுக்கு நாள் வேறுபட்டிருக்கும் எனபதைக் கவனத்தில் கொள்ளவும்.

மேற்குறிப்பிட்ட பகல் மானம்; இரவுமனம் என்பனவற்றை விளக்கும் வகையில், சில தரவுகளைக் கீழே தந்துள்ளேன்.

இக் கட்டுரை வெளியாகும் ஏப்ரல் 21,புதன்கிழமையன்று; உலகின் பல நாடுகளில் நிகழும் சூரிய உதயம்,அஸ்தமனம்,நண்பகல் ஆகிய தகவல்களுடன் அன்றைய பகல்மானமும் இங்கு அளிக்கப்பட்டுள்ளது..

நாள்:- 21 ஏப்ரல்- புதன் கிழமை

அவுஸ்ரேலியா/மெல்பேர்ண்/விக்ரோறியா

ஜி.எம்.ரி       சூ.உதயம்     சூ.அஸ்த   நண் பகல்   பகல்மானம்

+10:00            06:52            17:46         12:19        10ம 54நிமி 04செ

கனடா/ஒன்ராறியோ/ரொறன்ரோ

-5:00              06:25            20:08         13:16        13ம 43நிமி 05செ

ரஷ்யா/சென்ற் பீற்றர்ஸ்பெர்க்

+3:00             06:25            21:30         13:57        15ம 05நிமி 01செ

ஆர்ஜெண்டீனா/புவனர்ஸ் அயர்ஸ்

-3:00             07:22            18:23          12:53        11ம 01நிமி 34செ

மலேசியா/கோலாலம்பூர்

+8:00             07:06            19:18          13:12        12ம 11நிமி 57செ

தென் ஆபிரிக்கா/கேப் டவுண்

+2:00             07:13            18:16          12:45        11ம 02நிமி 59செ

அமெரிக்கா/டெக்ஸாஸ்/ஹூஸ்டன்

-5.00            06:49            19:52          13:20        13ம 03நிமி 39செ

டென்மார்க்/கொப்பன்ஹேகன்

+1:00             05:51            20:28          13:08        14ம 36நிமி 45செ

இந்தியா/தமிழ்நாடு/மதுரை

+5:30             06:05            18:28          12:16         12ம 23நிமி 36செ

ஒரேநாளில் உலகின் பலபாகங்களில் உள்ள நாடுகளில், சூரியோதயம்,அஸ்தமனம் உட்பட பகல் மானங்களிலும் வேறுபாடுகள் இருப்பதை இந்த அட்டவணை காட்டுகிறது.

இங்கு, ஒரே நாளில் வெவ்வேறு நாடுகளில் பகல்மானத்தின் அளவில் காணப்படும் வேறுபாடுகளும், சூரியஉதய-அஸ்தமன நேரங்களும், ஓரைகளில் மட்டுமன்றிப் பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படும் இராகு காலம், எமகண்டம், சுப முகூர்த்தங்கள் போன்றவற்றிலும் இடத்துக்கிடம் நேர வேறுபாடுகளைக் கொண்டிருக்கும்.

எடுத்துக்காட்டாக, நாம் மேலே குறிப்பிட்ட அட்டவணைப்படி, இன்று அவுஸ்த்ரேலியாவில்(மெல்பேர்ண்) பகல்மானம்   10மணி 54 நிமி 04 செக்கன்ட் களாக இருக்கையில்; கனடா (ஒன்ராறியோ) வில் 13 மணி 43 நிமி 05 செக்கன்ட்களாகவும்; இந்தியா/மதுரையில் 12 மணி 23 நிமி 36 செக்கண்ட்களாகவும் இருப்பதைக் காண்கிறோம்.. இவ்விடங்களில் பகல் நேர ஓரைகளின் அளவுகளும் வேறுபட்டிருக்கும்.

குறிப்பிட்ட நாளின் ஆரம்ப ஓரை அதன் சூரிய உதயத்தில் இருந்து தொடங்குகிறது. தொடர்ந்து ஏனைய ஓரைகள் யாவும் வரிசைக்கிரமப்படி அன்றைய பகல் மானத்தின் பன்னிரெண்டு சமபாகங்களையும் பூர்த்திசெய்யும் சமயத்தில், அந் நாளின் சூரிய அஸ்தமனம் ஏற்பட்டுவிடும்.பின்னர், அதிலிருந்து, (இரவுமானத்தின்) அடுத்த பன்னிரெண்டு சமபாகங்களையும் நிறைவுசெய்யும்போது மறு நாளின் சூரிய உதயம் ஆரம்பித்துவிடும்.

இதனை விளக்கும் வகையில் இங்கு, அவுஸ்த்ரேலியா; கனடா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இன்று (21 ஏப்ரல் 2010) இடம்பெறும் ஓரை விபரங்கள் தரப்பட்டுள்ளன.. இவை அனைத்தும் அந் நாடுகளின் சூரிய உதய-அஸ்தமன நேரங்கள், பகல்மானம்; இரவுமானம் என்பனவற்றினைக் கருத்தில் கொண்டு கணிக்கப்பட்டவையாகும்.

ஓரை விபரம் அவுஸ்/மெல்பெர்/

விக்ரோறியா

கனடா/ஒன்ராறி/

ரொறன்ரோ

மலேசியா/

கோலாலம்பூர்

புதன் 06.52—07.46 06.25-07.33 07.06-08.07
சந்திரன் 07.46-08.41 07.33-08.42 08.07-09.08
சனி 08.41-09.35 08.42-09.50 09.08-10-09
குரு 09.35-10.30 09.50-10.59 10.09-11.10
செவ்வாய் 10.30-11-24 10.59-12.07 11.10-12.11
சூரியன் 11.24-12.19 12.07-13.16 12.11-13.12
சுக்கிரன் 12.19-13.13 13.16-14.24 13.12-14.13
புதன் 13.13-14.07 14.24-15.33 14.13-15.14
சந்திரன் 14.07-15.02 15.33-16.41 15.14-16.15
சனி 15.02-15.57 16.41-17.50 16.15-17.16
குரு 15.57-16.51 17.50-18.58 17.16-18.17
செவ்வாய் 16.51-17.46 18.58-20.08 18.17-19.18
சூரியன் 17.46-18.51 20.08-20.59 19.18-20.17
சுக்கிரன் 18.51-20.07 20.59-21.50 20.17-21.16
புதன் 20.07-21.12 21.50-22.43 21.16-22.15
சந்திரன் 21.12-22.18 22.43-23.34 22.15-23.14
சனி 22.18-23.23 23.34-24.25[00.25] 23.14-24.13[00.13]
குரு 23.23-24.29[00.29] 00.25-01.17 00.13-01.12
செவ்வாய் 00.29-01.35 01.17-02.08 01.12-02.11
சூரியன் 01.35-02.40 02.08-02.59 02.11-03.10
சுக்கிரன் 02.40-03.46 02.59-03.51 03.10-04.09
புதன் 03.46-04.51 03.51-04.42 04.09-05.08
சந்திரன் 04.51-05.57 04.42-05.33 05.08-06.07
சனி 05.57-06.52 05.33-06.25 06.07-07.06

பஞ்சாங்கத்தில், இந்த ஓரைகள் மற்றும் அவை நிகழும் நாள்கள் தொடர்பாகப் பலன்கள் வழங்கப்பட்டிருப்பதை காணலாம்.

இதே போன்று, நாள்களோடு தொடர்புடைய, ராகு காலம்; எமகண்டம்; குளிகன் மற்றும் சுப முகூர்த்த நேரங்கள் ஆகியனவும் அந் நாளின் சூரிய உதயம், பகல்/இரவு மானங்களோடு தொடர்புடையனவேயாகும்.

தொடர்ந்து மேலும் சில அடிப்படைத் தகவல்களை அடுத்த கட்டுரையில் தருகிறேன்.

**********************************************************************  à>>

.

பஞ்சாங்கமும் பஞ்ச அங்கங்களும்-பகுதி 1 [14-04-2010 ஈழநேசன்(அவுஸ்ரேலியா) இணைய இதழில் வெளியானது]

பஞ்சாங்கமும், ‘பஞ்ச’ அங்கங்களும்.

பகுதி-1

“பிரபலன்”

புது வருடம் பிறக்கிறது. ஜோதிட நம்பிக்கை கொண்டவர்கள் இனிவரும் ஆண்டு அளிக்கப்போகும் பலன்களைத் தெரிந்து கொள்ளக் கோவில்களையும், தமக்கு நம்பிக்கையான ‘ஜோதிடர்’களையும் நாடிச்செல்வார்கள்.

பொதுவாக இதுபோன்ற சமயங்களில் பஞ்சாங்கம்’படிப்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

உண்மையில் இந்தப் ‘பஞ்சாங்கம் படிப்பது’ என்பது, குறிப்பிட்ட அந்த வருடப் பஞ்சாங்கத்தில் எழுதப்பட்டிருக்கும் அவ்வருடத்துக்கான பொதுப் பலன்களை வாசித்து விளக்குவதே ஆகும்.

ஜோதிட பலன்களைக் கூறுவதற்கு சூரியன் முதல் சாயாக் கிரகங்கள் என்று சொல்லப்படும் ராகு-கேது வரையிலான நவ கோள்களின் நிலையினைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்பது அடிப்படை விதியாகும்.

எனினும், நமது ‘பஞ்சாங்கங்கள்’ யாவும் நாள்-நட்சத்திரம்-திதி-கரணம் –யோகம் என்னும் ஐந்து அங்கங்கள் பற்றி அறிவுறுத்தும் ஓர் நூல் ஆகும்.

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெரும்பாலான விடயங்கள்; நாம் புதிதாகச் செயல்களில் ஈடுபடும் சமயத்தில் கவனத்தில் கொள்ளவேண்டியவற்றினை விளக்கும் வழிகாட்டி என்றும் சொல்லலாம்.

இதனை இன்னும் விளக்கமாகச் சொல்வதாயின், பஞ்சாங்கங்கள் ; நமக்கு ‘நல்ல நாள்’ குறித்துத் தரும் ‘புரோகிதர்க’ளின் ‘கை நூல்’ என்று கூறுவதே மிகவும் பொருந்தும்.

ஆனால், இந்தப் பஞ்சாங்கங்களின் துணையோடுதான் இன்று பலர் ‘ஜோதிடம்’ கூறுவதைக் காண்கிறோம்.

சுப-அசுப காரியங்களுக்கான நேரத்தினையும்,நாளினையும் குறிக்கப் பயன் படுத்தப்படும் பஞ்சாங்கம் பற்றிய விளக்கத்தினை  உங்கள் முன் வைப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

பஞ்ச-அங்கங்கள் எனும் ஐந்து உறுப்புகள்

பெயருக் கேற்றாற்போல் பஞ்சாங்கங்கள் யாவும், நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போன்று; நாள், நட்சத்திரம், திதி, கரணம் ,யோகம் என்னும் ஐந்து விடயங்களைக் கொண்டிருக்கிறது.

இந்த ஐந்தும், நவ கோள்களுள், சூரியன்,சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் தொடர்பானவையே. ஏனைய கிரகங்களுக்கும் இவற்றுக்கும் தொடர்பு ஏதும் கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது, ஒன்பது கிரகங்களின் பிரபஞ்ச இருப்புக்கும், பூமியில் பிறக்கும் உயிரின் இருப்புக்கும் இடையேயான தொடர்பினை அடிப்படையாகக் கொண்டது நமது ‘இந்திய ஜோதிடம்’. இதுவே, மேற்குலகில் ராகு-கேது இவற்றுக்குப் பதிலாக யுரேனஸ்,நெப்டியூன்,புளூட்டோ என்னும் கிரகங்களை உள்ளடக்கி மொத்தம் பத்துக் கிரகங்களதும் நிலையினை ஆராய்ந்து பலன் கூறும் கலையாக நிலைபெற்றிருக்கிறது.

ஆனால், பஞ்சாங்கம் கணிப்பதற்கு சூரியன் மற்றும் சந்திரன் இவை இரண்டினதும்  விண்வெளி இயக்கங்களே கருத்தில் கொள்ளப்படுகின்றன. இவற்றோடு, நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் பல‘ஒளி வருடங்கள்’ தொலைவில் நிலை பெற்றிருக்கும் நட்சத்திரங்களும் சேர்த்துக் கொள்ளப் பட்டுள்ளன.

‘ஜோதிடர்’களுக்குத் தேவையான நவ கோள்களின் பிரபஞ்ச இருப்பினை ஆராய்வதை விட்டுவிட்டு, ‘புரோகிதர்’களுக்குக் கைகொடுக்கும் ‘பஞ்சாங்க’ம் பற்றிய விளக்கத்திற்கு வருகிறேன்.

இதனை விளங்கிக் கொள்வதற்கு நமது பூமி, எமது வெற்றுக் கண்களால் தினமும் நாம் தரிசிக்கும் சூரியன் –சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் குறித்த அடிப்படை வானியல் அறிவு தேவை.

இந்தப் பிரபஞ்சம், பல கோடி விண்மீன் கூட்டங்களால் ஆனது என்கிறது வானியல்!

இவற்றில் நமது சூரியன் இடம்பெற்றிருக்கும் ‘சூரிய மண்டலம்’ சுருள் வடிவப் ‘பால் வீதி’ [Milky Way] ஒன்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிறு ‘துளி’யே ஆகும் என்றால் வியப்பாகத்தான் இருக்கிறது! என்றாலும், இதுதான் உண்மை. இச் சுருள் வடிவப் ‘பால் வீதி’’யில் இடம்பெற்றுள்ள நமது சூரிய மண்டலம்; அதில் உள்ள கிரகங்களோடு சேர்ந்து இதன் மையப்பகுதியைச் சுற்றி வருகிறது!

இப் பால்வீதிக்கு அப்பால், பிரபஞ்சத்தில் இறைந்து கிடக்கும் நட்சத்திரக் குவியல்களுள் சிலவற்றை இப் பால்வீதியும் அதனோடு இணைந்துள்ள நமது சூரிய மண்டலமும் ஒவ்வொரு விநாடியும் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. அதாவது…… நமது சூரிய மண்டலம் இருக்கும் இந்தப் பால்வீதி யை ஓர் ‘வண்டிச் சக்கரம்’ எனக் கற்பனை செய்து கொள்வீர்களாயின்….  இவ்வண்டிச் சக்கரத்துக்கு அப்பால் பல ஆயிரம் ஒளி வருடங்கள் தொலைவில் தொங்கிக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட சில நட்சத்திரக் குவியல்களை, இச் சக்கரம் தன் சுழற்சியின்போது கடந்து சென்று கொண்டிருக்கிறது என்று பொருள்!

ஓர் சுற்று அல்லது வட்டம் என்பது 360 பாகைகளை உடையது என்பது, நவீன அறிவியல் கூறும் தகவல்.

எனவே நமது சூரிய மண்டலமும்,அதனோடு சேர்ந்து இயங்கும் ஏனைய கிரகங்களும் தமது ‘மண்டல எல்லை’க்குள் சுழன்றும்,சுற்றியும் வரும் போது; விண்ணில் எங்கோ தொலை தூரத்தில் உள்ள நட்சத்திரங்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றன என்பது புரிகிறதல்லவா?

இனி, நமது சூரிய மண்டலத்துக்கு வருவோம்.

இச் சூரிய மண்டலத்தில் இடம் பெற்றுள்ள கோள்களுள், நமது இந்திய ஜோதிடம் சுவீகரித்துக் கொண்டவை மொத்தம் ஏழு கோள்கள் மட்டுமே. அதிலும் சூரியன் ஓர் நட்சத்திரமாயினும், அதனையும் ‘கோள்’ என வகைப் படுத்தியே எமது ‘ஜோதிட இயல்’ தன்னைக் கட்டமைத்துக் கொண்டுள்ளது.

சூரியனைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் , புதன், சுக்கிரன்,பூமி, செவ்வாய், குரு,சனி ஆகியவையும் இவற்றுக்கு அப்பால் யுரேனஸ், நெப்டியூன்,புளூட்டோ மற்றும் இக் கோள்களது உப-கோள்கள் யாவும் தமது இயக்கங்களின் போது; விண்ணில் உள்ள விண்மீன் (நட்சத்திரக்) கூட்டங்களைக் கடந்து செல்கின்றன.

நமது, ஜோதிடம் எடுத்துக் கொண்ட கோள்களின் வரிசையில்…..

சூரியன் ; பூமிக்குப் பதிலாக அதனைச் சுற்றிவரும் சந்திரன்; செவ்வாய்; புதன்; குரு; சுக்கிரன் மற்றும் சனி இவை ஏழும் இடம் பெறுகின்றன. இவற்றோடு, சாயாக் கிரகங்களான ராகு-கேது க்களோடு சேர்த்து ஒன்பது கிரகங்கள் எனும் கணக்கு உருவாகிற்று.இவ் ராகு-கேது இரண்டும் உண்மையிலேயே சந்திரன் பூமியைச்  சுற்றும் வட்டப் பாதையும், பூமி சூரியனைச் சுற்றும் வட்டப் பாதையும் ஒன்றை மற்றையது  சந்திக்கும் அல்லது வெட்டும் புள்ளிகள் என்பதே உண்மை. இப் புள்ளிகள் இரண்டும் கண்ணுக்குப் புலப்படாத ‘மாயப் ‘ புள்ளிகளாதலால் இவற்றைச் ‘சாயாக் கிரகங்கள்’ (நிழல் கோள்கள்) எனக் குறிப்பிடுகின்றனர்.

மேற்குறிப்பிட்ட விபரங்களைத் தெரிந்து கொண்டால், இங்கு நாம் எடுத்துக் கொண்ட ‘பஞ்சாங்கம்’ பற்றிய விளக்கத்தினை எளிதில் புரிந்து கொள்ளமுடியும் என்பதாலேயே இத்தனையும் எழுதினேன்.

இனிப் பஞ்சாங்க விளக்கத்துக்கு வருகிறேன்,

நாள்:-

பூமியின் சுழற்சியோடு தொடர்புடையது நாளாகும். நமது பூமி தனது அச்சில் ஒரு தடவை சுழன்று முடிக்கும் நேரம் நாள் எனப் படுகிறது.இந்த நாளினைத் தீர்மானிப்பது சூரியன் ஆகும்.

அதாவது; பூமியின் ஓர் முழுச் சுழற்சி என்பது, சூரியனின் முதல் உதயத்துக்கும், இரண்டாம் உதயத்துக்கும் இடைப்பட்ட நேரம் ஆகும்.எனவேதான் இந்திய நாள்காட்டிகளில் சூரிய உதயம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

எனவே, நமது பஞ்சாங்கம் கூறும், நாள் என்பது, பூமி-சூரியன் சம்பந்தப் பட்ட இயக்கத்தினால் ஏற்பட்டதே என்பது இப்போது விளங்கியிருக்கும்.

நட்சத்திரம்:-

பொதுவாக எல்லாக் கிரகங்களும் சூரியனைச் சுற்றிவரும் சமயத்தில், அவற்றின் பின்னணியில் நட்சத்திரக் கூட்டங்களைக் கடந்து செல்கின்றன.

எனினும், நாம் இங்கு குறிப்பிடும் ‘நட்சத்திரம்’ பூமியில் பிறக்கும் ஒருவரது நட்சத்திரம் என்னும் பொருளிலேயே எடுத்துக்கொள்ளப் படுகிறது.

உண்மையில், இது ஒருவர் பிறக்கும் சமயத்தில் சந்திரன் இடம் பெற்றிருக்கும் நட்சத்திரத்தின் அல்லது அக்கூட்டத்தின் பெயரே ஆகும்.

இன்னும் விளக்கமாகக் கூறுவதாயின்……..

பூமியில் ஒருவர் பிறக்கும் சமயத்தில், பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்திரன் எந்த நட்சத்திரத்தினைக் (இவை பெரும்பாலும் பல நட்சத்திரங்களின் தொகுதியாக இருப்பதுண்டு- பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ள இவ்வைந்து அங்கங்களையும் பற்றி விரிவாக எழுதும்போது இது குறித்த விளக்கத்தினைப் பெறலாம்) கடந்து செல்கின்றதோ அதுவே அவரது ‘ஜன்ம நட்சத்திரம்’ என வழங்கப்படுகிறது.

எனவே நமது பஞ்சாங்கம் குறிப்பிடும் நட்சத்திரம் என்பது பூமி-சந்திரன் இவையிரண்டினுக்கும் இடையில் நிகழும் இயக்கங்களோடு, விண்ணில் உள்ள நட்சத்திரங்களின் இருப்பினோடு தொடர்புடையது என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்!

விண்ணில் நாம் கற்பனையாக உருவாக்கி வைத்திருக்கும், இந் நட்சத்திரங்களால் ஆன திரையில் மொத்தம் 27 நட்சத்திரங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அடுத்து,

திதி:-

பூர்ணிமை; அமாவாசை;மற்றும்  பிரதமை  முதல் சதுர்த்தசி வரையிலான பதின்நான்கும் திதிகள் என்பது எமக்குத் தெரியும்.

இந்தத் திதிகள் அனைத்தும், சூரியன் –சந்திரன் இவை இரண்டின் இயக்கங்களோடு மட்டும் தொடர்புடையவை ஆகும்.

பூமியச் சுற்றி வரும் சந்திரன், அது தன் ஓர் சுற்றுக்குச் சுமார் ஒரு மாத காலத்தினை எடுத்துக் கொள்கிறது. அவ்வாறு சுற்றிவரும் சமயத்தில், பூமியினைப் பொறுத்த மட்டில்; சில நாள்களில் சூரிய ஒளி அதன் பின்புறத்தில் படும்விதமாகவும், ஏனைய நாள்களில் அதன் முன்புறமாகப் படும் வகையிலும் அமைந்துவிடுகிறது.

இவ்வாறான இயக்கத்தின்போது, சந்திரனின் பின் புறத்தில் சூரிய ஒளி படும் போது , பூமியை நோக்கி இருக்கும் அதன் முன் பக்கம் இருள் மயமாகி விடுகிறது. இதனையே நாம் அமாவாசை என்கிறோம்.அதே போன்று, சூரிய ஒளி சந்திரனின் பூமி நோக்கிய முன் புறத்தில் பூரணமாகப் படும்போது அதனை நாம் பூரணை என்கிறோம்.

வானியல் கணிப்பின்படி, சூரியனும் சந்திரனும் பூமியில் இருந்து ஒரே அளவான கோண அளவில் அமைந்திருக்கும் சமயம் அமாவாசை ஏற்படுகிறது.நேரெதிராக நூற்றி எண்பது (180) பாகையில் இவை இடம் பெற்றிருக்கும் சமயத்தில் பூரணை ஏற்படுகிறது. இடையில் உள்ள இந்த 180 பாகைகளையும் 15 ஆல் வகுத்து ஒவ்வொரு 12 பாகைக்கும் ஒரு திதி என்னும் வகையில் திதிகள் பங்கிடப் பட்டிருக்கின்றன.

இதன் படி;அமாவாசையின் போது ஒரே கோணத்தில் ( சுழியம் பாகை) இருக்கும் சூரியனும் சந்திரனும் படிப்படியாக விலகிச் சென்று, பூரணையின் போது 180 பாகை இடைவெளியினை எட்டிவிடும்.

பின்னர், பூரணையில் ஆரம்பித்துப் படிப்படியாக ஒன்றை மற்றையது நெருங்கி வந்து மீண்டும் சுழியம் பாகையை எட்டும். இதனை 360 பாகை எனவும் குறிப்பிடலாம்.இரண்டும் ஒன்றே!

அமாவாசையில் தொடங்கி பூரணை வரை வளர் பிறை எனவும்; பூரணை முதல் அமாவாசை வரை தேய் பிறை எனவும் குறிப்பிடப் படுகிறது.

எனவே, திதிகள் யாவும் சூரியன்- சந்திரன் இவையிரண்டினுக்கும் இடையில் நிகழும் சந்திப்பு மற்றும் பிரிவு தொடர்பான கணிப்பு என்பதை இப்போது தெரிந்து கொண்டிருப்பீர்கள்!

அடுத்து;

கரணம்:-

பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படும் இந்தக் ‘கரண’த்திற்கும், இன்றைய அரசியல்வாதிகள் அடிக்கும் குட்டிக்’கரண’த்திற்கும் யாதொரு சம்பந்தமும் கிடையது!

‘திதி’ என நாம் முன்பே வரையறை செய்திருக்கும் பிரிவின் சரிபாதி- அதாவது 12 பாகை அளவினைக் கொண்ட திதியில் இரண்டு கரணங்கள்; ஒவ்வொன்றும் ஆறு (6) பாகை அளவில், இடம்பெற்றிருக்கும்.

கரணங்கள் பதினொன்று எனவும் அவற்றில் நான்கு ;மாதத்தில் ஒரேயொரு தடவைதான் வரும் எனவும், ஏனைய ஏழும் ஒவ்வொன்றும் எட்டுத்தடவைகள் வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி ஒரு மாதத்தில் உள்ள 30 திதிகளது பாதிப் பங்கினை உடைய 60 கரணங்களும் அவற்றுக்குரிய ஒழுங்கில் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ளன.

இனி இறுதியாக;

யோகம்:-

குறிப்பிட்ட சமயத்தில்;சூரியனது பாகை அளவையும் ( இதனை ஸ்புடம் என்பார்கள்); சந்திரனது பாகை அளவையு கூட்டினால் வருவது ‘யோகம்’ ஆகும்

இவ் யோகங்களும், நட்சத்திரங்களைப் போன்று எண்ணிக்கையில் 27 ஆகும்.

மேற்கூறிய  நாள்; நட்சத்திரம்; திதி ; கரணம்; யோகம் இவ் ஐந்துமே பஞ்சாங்கத்தின் பிரதான அங்கங்கள் அல்லது உறுப்புகள் ஆகும்.

இவை ஒவ்வொன்றினுக்கும் இடப்பட்டிருக்கும் பெயர்கள், அவற்றுக்கும்-மனித வாழ்வுக்கும் இடையிலான தொடர்புகள் எனத்  தமது அறிவினாலும், அனுபவங்களாலும்-எமது ‘ரிஷி’களும், (விஞ்)ஞானிகளும்- உணர்ந்து கூறிய விபரங்கள் என்பன குறித்து, இனிவரும் பகுதிகளில் பார்ப்போம்..

வானும் வாழ்வும்!


மனித இனம், படிப்படியாக சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றுவந்த சமயத்தில்எதிர் காலம் குறித்த கற்பனைகளும்திட்டங்களும்.. கூடவேபயங்களும் வளர ஆரம்பித்துவிட்டன எனலாம்.

தன்னைச் சுற்றியிருக்கும் ஏனைய மனிதர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொருவகையான குண இயல்புகளையும், திறமைகளையும், உடல் வலிமையினையும், வாழ்க்கை முறைகளையும், ஆயுளையும் கொண்டிருப்பதைக் காணும் போது, தனதும் தனது உறவுகளினதும் எதிர்காலம் குறித்துத் தெரிந்து கொள்ளும் ஆவல் அவன் மனதில் உருவாகியிருக்கக் கூடும்!

இந்த ஆவலும் தேடலுந்தான் காலப் போக்கில் எதிர்காலம் பற்றி உணரும் திறனாகவும்,அவ்வாறு உணர்ந்ததை உரைக்கும் கலையாகவும் பரிணமித்தது எனலாம்.

இயற்கையோடு வாழ்ந்துஅதன் வளங்களால் தன்னை வளப்படுத்திக் கொண்ட மனிதன்; ஆரம்பத்தில், தனக்கும் முன்னால்இயல்பாகவேதோன்றி, ஓரொழுங்கில் இயங்கிவரும் சூரிய,சந்திர,நட்சத்திரக் கூட்டங்களை; அவற்றின் விண்வெளி இருப்பினைஅதாவது விண்ணில் அவை சுற்றிவரும் கட்டொழுங்கினைத் தனக்குத் துணையாக எடுத்துக் கொண்டான்.உயிர் வாழ்தலுக்கு ஆதாரமாக ஒளியையும், வெப்பத்தையும் வழங்கும் சூரியன்; இரவு நேரங்களில் இதமான வெளிச்சத்தையும், மன எழுச்சியையும் தூண்டிவிடும் சந்திரன்…; இவையனைத்துக்கும் அப்பால் தூரத்தே ஒளிரும் நட்சத்திரங்கள் என, இயற்கை படைத்தளித்த அனைத்தையும், அவன் வியப்போடு ஆராய முற்பட்டான்.

முதல்படியாக, இவ்விண்பொருட்களின் உதயஅஸ்தமன நிகழ்வுகளும் அவற்றின் இயக்கங்களும், உலகின் தட்ப வெப்ப மாறுபாடுகளும், மழை,புயல்,வறட்சி ஆகியவையும் இவையனைத்துக்கும் இடையிலான தொடர்புகளும் அவனுக்குப் புரிய ஆரம்பித்தன.

வானியலின் ஆரம்பமே இந்த மனித அவதானிப்புகளில் இருந்து உருவானது என்று சொல்லலாம்.

மனித இனத்தின் தோற்றத்திலிருந்து, காடுகளிலும்,மலைகளிலும்,

கட்டாந்தரைகளிலும் அலைந்து திரிந்து, காய்களையும் ,கனிகளையும்; தேவை ஏற்பட்ட போது விலங்குகளையும் வேட்டையாடி உண்ட மனிதன், தனது உணவுத்தேவைக்காக அதனைத் தானே உற்பத்திசெய்யும் காலம் உதயமான சமயத்தில்அதற்கு உயிர் நாடியாக விளங்கும் வெளிச்சமும், மழையும் பற்றிய கவனம் அவன் மனதில் எழுந்தது.

மழை எப்போது பெய்யும், வெய்யில் எப்போது அடிக்கும் என்பதை அறிய அவன் விண்ணில்தன் கண்களுக்குக் காட்சி தந்த விண்பொருட்களின் இயக்கங்களைத் துணையாக்கிக் கொண்டான்.

காலப் போக்கில், இவற்றின் இயக்கங்களுக்கும் தனிமனித வாழ்வின் சம்பவங்களுக்கும் இடையேயான தொடர்புகள் அவனது மூளையில்உறைத்தபோது…. இன்று நாம்ஜோதிடம்என்னும் பெயரில் அழைக்கும்எதிர்காலம் உரைக்கும்கலை முகிழ்த்தது.

ஆரம்பத்தில் மனித இனம் தனது அறிதல் திறனின் உதவியால் ஏற்படுத்திக்கொண்ட வானியல் தரவுகள், காலப் போக்கில் வாழ்வியலில் துணைசெய்யும்ஜோதிடமாக; எதிர் காலம் பற்றி முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கு வழிகாட்டும் துறையாகத்; தன்னை இனங் காட்டிக் கொண்டது..

காலங் காலமாக எமது, பண்டைய ரிஷிகள் ( இவர்கள் யாவரும் ஒரு வகையில் அந்தக் கால விஞ்ஞானிகள் என்றுதான் சொல்லவேண்டும்!) தமது அறிவின் திறனால், புதிய அணுகுமுறைகளைக் காணும் தேட்டத்தின் காரணமாகக் கண்டறிந்தவற்றைச் சுலோகங்களாக வடித்து வைத்தனர்.

அவ்வாறு அவர்கள் கூறிவைத்த அனுபவப் பதிவுகளை , அவர்களின் பின்வந்த சீடர்கள்,ஒழுங்கு படுத்தித் தொகுத்து அவற்றை மனித வாழ்வுக்கு துணைசெய்யும்ஜோதிடக் கலையாக உருவாக்கியுள்ளார்கள்.

இந்தஜோதிடம்என்னும் அறிவுக் கலை, முற்றுமுழுதாக; கோள்கள்நட்சத்திரங்கள் இவற்றின் இயக்கங்களோடு தொடர்புடைய ஓர்வாழ்க்கை வழிகாட்டியாகும்.

பிரபலன்